` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


வியாழன், 20 ஜூலை, 2017

எங்கே போகிறது இந்த சாலை .

கர்னல் பாவாடை கணேசனின் "அகத்தூண்டுதல் பூங்கா" பற்றி வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். தமிழ் நாட்டின் நாலைந்து இடங்களில் இது அமைந்திருந்தாலும்
அவரது பிறந்த ஊரான சன்னாநல்லூரில் இது சிறப்பிடம் பெறுகிறது என்று சொல்லத்தேவை இல்லை

இந்த நெடுஞ்சாலையைப் பாருங்கள். இது சன்னாநல்லூர் கிராமத்தில் வடக்கு (வலது -மேலே) தெற்கு சாலை. சென்னையிலிருந்து தெற்கே செல்லும் கிழக்குக் கடற்கரை சாலைக்கு இணையாக சற்றே உள்புறமாக இது சன்னாநல்லூர் வழியாக கன்னியாகுமாரி வரை செல்லுகிறது.
மயிலாடுதுறை -திருவாரூர் என்ற வடக்கு-தெற்கு சாலையும் நாகப்பட்டிணம் -கும்பகோணம் என்ற கிழக்கு -மேற்கு சாலையும் சந்திக்குமிடமே சன்னாநல்லூர் என்று முன்பே பார்த்தோம்.
இந்த சாலையை ஒட்டியே மயிலாடுதுறையிலிருந்து வருகையில் வலதுபுறமாகவும் திருவாரூரிலிருந்து வருகையில் இடது புறமாகவும் அமைந்துள்ளது "அகத்தூண்டுதல் பூங்கா"
தினமும் ஆயிரக்கணக்கான மனிதர்கள், வண்டிகள், வாகனங்கள் இந்த சாலையில் சென்றுகொண்டிருக்கின்றன. தேடுதல் என்ற அறிவு விளக்கம் பெறவும் அதன் காரணமாக சாதனைகள் புரியவும்,சரித்திரம் படைக்கவும் எண்ணமும் குறிக்கோளும் உடையவர்களுக்கு இது ஒரு சொர்க்க பூமி.
திறந்து கிடக்கும் இந்த சொர்க்க வாசலுக்குள் நுழைய நேரமின்றி மக்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். தங்களது அகக்கதவை இறுக்கித் தாளிட்டுவிட்டு புற உலகில் அறிவையும், மகிழ்ச்சியையும் ,மனநிறைவையும் தேடித்தேடி அலைகிறார்கள்.
இந்தியத்திருநாட்டின் மூவர்ணக்கொடி பட்டொளி வீசி பறக்க நுழைவாசலின் இருபுறமும் சுவற்றில் சில உந்துசக்தி செய்திகள் எழுதப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் இரு சக்கர வாகனங்களிலும் பேரூந்துகளிலும் பறந்து கொண்டிருக்கிறார்கள்.
பத்தாவது படித்து முடித்த ஒரு மாணவன் பள்ளிக்கூடத்திலிருந்து நின்று விட்டு ஒருவருடம்போல் இந்த உலகைப்படிக்கட்டும். உடலளவிலும் மனதளவிலும் உறுதியானவனாக மீண்டும் அவன் கல்வியறிவைத் தேடும் பணி தொடரட்டும் . காலம் அவனை ஒரு மா மனிதனாக அறிமுகப்படுத்தும்.
பெற்றோர்கள் தங்கள் வாரிசு ( ஆண் ,பெண் ) நல்லவிதமாக வளர்ந்து வல்லவனாகவும் நல்லவனாகவும் வரவேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஒரு உயிர் தனது கர்ம வினைக்கைக்கேற்பவே பிறவி எடுக்கிறது என்பதை அவர்கள் ஆரம்ப காலத்தில் உணர்வதில்லை. காலப்போக்கில் ஆ,! என்மகனா ? என்று மகிழ்ச்சியிலோ அல்லது ஐயோ ! என் மகனா ? என்று துக்கத்திலோ அவர்கள் சப்தமிடும்போது அண்ட வெளி (மறு பெயர் இறைவன் ) அதிர்ந்து சிரிக்கும் போது தெரிந்து கொள்வார்கள் .

தாமே தமக்குச் சுற்றமும்
தாமே தமக்கு விதி வகையும்
யாம் ஆர் எமது ஆர் பாசம் ஆர்
என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும்
அவன் தன் குறிப்பே குறிக்கொண்டு
போம் ஆறு அமைமின் பொய் நீக்கிப்
புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே !
என்பது மாணிக்கவாசகரின் "யாத்திரைப்பத்து "பொன்மொழி. இதையேதான் பகவத் கீதையும் சொல்கிறது.
உத்தரேத் ஆத்மனா ஆத்மானம் ந ஆத்மானம் அவஸாதஏத்!
ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்துராத் மைவ ரிபு ராத்மன !!
தங்களைத் தங்களால் உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதாம். இந்நிலையில் ஒருவனது உயர்வுக்கும் தாழ்வுக்கும் மற்றவர்களை எப்படி காரணம் காட்டமுடியும்.

கிராமப்புறத்தில் இப்படி ஆடு மாடுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்த ஒருவன் தனது 40 வயதில் இம்மாபெரும் தேசமான இந்தியத் திருநாட்டின் பிரதிநிதிக்குழு தலைவனானான் என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிந்தால் உங்கள் மகன் அல்லது மகள் நாளைக்கு சந்திரமண்டலத்திற்குப் போகலாம் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் .
காலம் பொன்னானது.வாருங்கள்!விரைந்து வாருங்கள்!!
எங்கே போகிறது இந்த சாலை என்று திகைத்து நிற்காமல் "அகத் தூண்டுதல் பூங்கா "வுக்கு வாருங்கள். உங்கள் எதிர்கால சிறப்பான வாழ்க்கைக்கான வழி கண்டு பயணத்தைத் தொடருங்கள்.

வாழ்க வளமுடன் .வாழ்க வளமுடன் !

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968